மராட்டிய மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழர்கள், மற்றும் பல வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்கப்பட்டார் தமிழரான கேப்டன் தமிழ்செல்வன். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலும் கணேஷ் குமார் யாதவ் என்ற ஒரு தமிழரே களமிறக்கப்பட்டார். கடும் போட்டிகளுக்கு மத்தியில் கேப்டன் தமிழ்செல்வன் 13921 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம் எல் ஏ ஆகியுள்ளார்.
கேப்டன் தமிழ்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள பிலாவிடுதி கிராமத்தில் பொதுவுடைமை குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றவர் ரயில்வே பார்சல் பிரிவில் கூலி வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பார்சல் ஒப்பந்தம் எடுத்து பலருக்கும் வேலை கொடுத்து வருகிறார்.
தீவிரவாதி கசாப் தாக்குதல் நடத்திய போது காயமடைந்த பலரையும் பார்சல் ஏற்றும் தள்ளுவண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டு வந்து காப்பாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு.
கூலி தொழிலாளிகள் நிறைந்த பகுதியில் அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதால் அவரை கேப்டன் என்று அப்பகுதி மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் மட்டுமின்றி அங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பு காட்டியதால் கடந்த முறை பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
கடந்த ஜூன் 13 ந் தேதி தனது மகள் திருமணத்திற்கு மராட்டிய முதல்வரை புதுக்கோட்டை அழைத்து வந்து நடத்தினார். இந்த நிலையில் தான் தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மராட்டிய சட்டமன்றத்திற்கு செல்லும் கேப்டன் தமிழ்செல்வன். அமைச்சரவையில் இடம் பெறவும் அதிக வாய்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.