Skip to main content

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது- உடனடி நடவடிக்கை கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy - Tamil Nadu Chief Minister's letter to the Prime Minister demanding immediate action!

 

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28/02/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (28/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகத் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடிக் கப்பலில் (பதிவு எண் IND-TN-06-MM 6824) 24/02/2022 அதிகாலையில் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டி தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப் படகில் (பதிவு எண் IND-PY-PK-MM-1370) மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதேபோன்று 26/02/2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் 27/02/2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள கிராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து, இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு தமிழக அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், இந்த நிலை தொடர்வதாகத் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்