சிரியாவின் குர்திஷ் தன்னாட்சி பகுதியிலிருந்து குர்திஷ் தீவிரவாதிகளை வெளியேற்ற துருக்கி ராணுவம் சில நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் துருக்கி ராணுவம் ரசாயனக் குண்டுகளை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
வியட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் நாபாம் எனப்படும் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி உலகையே கொந்தளிக்கச் செய்தது. பாஸ்பரஸை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்தக் குண்டுகள் மக்கள் உடலையே எரியச்செய்யும். வியட்னாம் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக ராசாயன ஆயுதங்களை பயன்படுத்த ஐ.நா. தடைவிதித்தது.
ஆனாலும், இந்த ஆயுதங்களை பயனபடுத்துவதாகவும் இவற்றை தயாரிப்பதாகவும் தனக்கு பிடிக்காத நாடுகளை அமெரிக்கா குற்றம்சாட்டுவது வாடிக்கை. இப்போதும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி குர்திஷ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவத்தின் மீது இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.
ஞாயிறன்று ரசாயனக் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் சிலரை மருத்துவமனைகளில் பார்த்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். ராஸ் அல் அய்ன் அருகே உள்ள டல் டாம்ர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு சிறுவனின் வீடியோ உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “அப்பா உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். எனது எரியும் உடலை அணையுங்கள்” என்று அந்தச் சிறுவன் கதறுகிறான். அவனுடைய கதறை 12 நேரம் நீடித்தது. பிறகுதான் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்ன சிகிச்சை அளிப்பது என்பது தெரியாமல் மருத்துவர்கள் தவித்ததாக கூறப்படுகிறது.
இதை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மறுத்திருக்கிறார். சர்வதேச குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே குர்திஷ் தீவிரவாதிகளை குறிப்பிட்ட பாதுகாப்பு கோடுக்கு அப்பால் செல்லும்படி துருக்கி அரசு கேட்டுக்கொண்டதை சமரசக்குழு ஏற்றுள்ளது.