மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அம்மாநிலச் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், நவம்பர் 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும், இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்றுடன் (29-10-24) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும் சூழ்நிலையில், இரு கூட்டணி கட்சிகளுக்குள் இன்னும் தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், 288 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. இதில் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலும், ஆளும் மகாயுதி கூட்டணியிலும் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸ் - சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) - உத்தவ் தாக்கரே (சிவசேனா) ஆகிய கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் 85-85-95 என தொகுதிகளை பிரித்துக்கொள்ள முடிவு செய்தன. ஆனாலும், அதனை மீறி காங்கிரஸ் 103 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவு, 87 இடங்களுக்கான வேட்பாளர்களையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 82 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. மீதமுள்ள 16 தொகுதிகளைப் பகிர்வு செய்வதிலும், சிறு கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதிலும் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
அதே போல், ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.க 150 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து அந்த இடங்களில் போட்டியிடுகிறது. அதில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 80 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து அந்த இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மகாயுதி கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், 49 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மீதமுள்ள 9 தொகுதிகளைப் பகிர்வதில் அந்த கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.