
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இருந்ததையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் செயல்பாடு பற்றியும் ட்விட்டரில் பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக்கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாந்த் பூஷணை குற்றவாளி எனக் கடந்த 20 ஆம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது.
அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மீண்டும் விசாரணை தொடங்கியபோதும், தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், அவருக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பிரசாந்த் பூஷண் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அவர் அபராதத்தை செலுத்தவில்லை எனில், மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது மூன்று வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.