கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போரட்டம் வெடித்தது.
இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் எற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதித்தது. மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையையேற்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா மறுத்துவிட்டார்.
மேலும் தலைமை நீதிபதி என்.வி ரமணா, ”நான் எந்த கருத்தையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த விஷயங்களை பெரிய அளவில் பரப்ப வேண்டாம். இதை டெல்லிக்கு கொண்டு வருவது சரியானதா? இதனை தேசிய அளவிலான பிரச்சனையாக்குவது சரியானதா என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்” என கூறியதோடு, ”உரிய நேரத்தில் இந்த விவகாரத்தில் தலையிடுவோம்” எனவும் கூறியுள்ளார்.