நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாகக் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யவேண்டும் எனக் கோரியும் பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பான 'தர்பார் மஹிலா சமன்வயா' குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 96 சதவீதம் பேர் கரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
பின்னர் இந்த மனு மீதான உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இவர்கள் தற்போது கடும் துயரத்தில் உள்ளனர், அவசரமாக ஏதாவது செய்ய வேண்டும். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பற்றியது. எங்கள் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏதாவது செய்ய வேண்டும். அவர்களிடம் அடையாளச் சான்றுகளை வற்புறுத்தாமல் அவசரமாக உணவு மற்றும் பண உதவிகளை வழங்கவேண்டும்" எனத் தெரிவித்தது.