உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அதன்பின் அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அப்பெண், திங்கள்கிழமை தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோருடன் ரேபரேலி நோக்கி காரில் சென்ற போது லாரி ஒன்று மோதியது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் விபத்து இல்லை, சதி என அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டிய நிலையில், இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் விபத்தில் உயிரிழந்த இந்த வழக்கை முடிக்க 30 நாள் அவகாசம் வேண்டும் என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் கூறியது.
இதற்கு ஒப்புக்கொள்ளாத நீதிபதிகள் 7 நாட்களில் இது தொடர்பான முழு விசாரணையையும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்னிற்கு மாநில அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை இனி டெல்லி சிபிஐ நீதிமன்றத்திலேயே நடைபெறும் எனவும், வழக்கு 45 நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.