
இந்திய நாட்டின் 75- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என உணர்ந்து, அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான, தரமான காய்கறிகளை அவர்கள் வீட்டு மாடியிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் அமைக்க 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பசுமையான புதுச்சேரியாக மாற்றும் வகையில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவைகள், திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அனைத்து அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் பாரம்பரியமிக்க எட்டு வழிச்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகரம் முழுவதும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற புதுச்சேரி மற்றும் தமிழக அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.
விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அரசுத்துறை உயரதிகாரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.