தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களை அம்மாநில ஆளுநர்கள் கிடப்பில் வைத்துள்ளதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு உடனே உத்தரவிடக் கோரியும் இருமாநில ஆளுநர்கள் மீதும் அம்மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு வரும் நவம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு அம்மாநில ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையொட்டி உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதாக, பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. அரசு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதித்து வருகிறார். மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை.
இது தொடர்பான வழக்கு இன்று (06-11-23) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பிரச்சனையில் நீதிமன்றத் தலையீட்டைக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளன. ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா?. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறைதான் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மாநில அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வரும் நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பஞ்சாப் முதல்வரும், ஆளுநரும் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.