நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.