மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த, கர்ப்பிணியான அதிதி குமார் சர்மா உள்பட 6 பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்து, கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தகுதிகாண் காலத்தின் போது நீதிபதிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனக் கூறி மாநில சட்டத் துறை அவர்களின் சேவைகளை நிறுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்குப் பிறகு, அதிதி குமார் சர்மா கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துகொண்டது. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 பெண் நீதிபதிகளின் வழக்கு தொடர்பான விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை கேட்டது. அதன் பிறகு, மறுபரிசீலனை செய்து நான்கு பேரை மட்டும் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா செளத்ரி ஆகியோ விலக்கப்பட்டனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று (13-12-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளில் ஒருவர், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதாக நீதிமன்றத்துக்கு தெரியவந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘நீதித்துறை அதிகாரிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு குறித்து எந்தவித கருத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது. நீதித்துறையில் ஆடம்பரத்திற்கு இடமில்லை. நீதிபதிகள் துறவிகளைப் போல வாழ வேண்டும். குதிரைகளைப் போல் பணியாற்ற வேண்டு. அதே நேரத்தில் தீர்ப்புகள் குறித்த தனிப்பட்ட கருத்துக்கள் சொல்வதை தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.