18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதில் ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டசபைக்கும் கடந்த மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி, அம்மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம் பலவாக்கேட் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். அந்தப் புகாரையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டியை, போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது. எம்.எல்.ஏவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீதித்துறையின் கேலிக்கூத்து என்று கூறி, நாளை மச்சர்லா தொகுதியின் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் நுழையவோ அல்லது அதன் அருகில் இருக்கவோ கூடாது என்று ரெட்டிக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.