இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவின் போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களுக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஹரித்வாரில் குவிந்த அவர்களை விவசாய சங்கத்தினரும் மக்களும் சமாதானப்படுத்தினர். தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பிரிஜ் பூஷன் சிங் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “டெல்லியில் நமது மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்டதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளேன். அவர்கள் நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர்கள். அந்த பதக்கங்கள் அவர்களது பெருமையின் குறியீடு. எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசி, ஹஸ்ரா மோர் முதல் ரவீந்திர சரோபர் வரை விளையாட்டு வீரர்களுடன் பேரணி நடத்த வேண்டும் என கூறியுள்ளேன். மல்யுத்த வீரர்களின் சம்மேளனத் தலைவரை கைது செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின் அவர் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல்” எனக் கூறினார்.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மெழுகுவர்த்தி பேரணியில் ஈடுபட்டார். பேரணிக்கு முன்னதாக அவர் பேசுகையில், ”டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி காந்தி சிலை நோக்கு பேரணியாக செல்வோம் என கூறினார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற மம்தா பானர்ஜி பின்னர் தொண்டர் ஒருவரின் புல்லட் வண்டியில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலைப்பேரணியிலும் ஈடுபட்டார். பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நமது நாட்டின் பெருமை என்றும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்ளுமாறு மல்யுத்த வீரர்களை கேட்டுக் கொண்ட மம்தா பானர்ஜி இந்த போராட்டம் மனிதாபிமான நீதிக்கானது என்றார்.
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மல்யுத்த வீரர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உறுதி செய்வது பேசப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர்களுக்கு பேச வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.