“நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் அவசியம்” என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக மற்றும் மத அமைப்புகள் தம் கருத்துகளை ஜூலை 14 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்து இருந்ததாக சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அந்தக் கருத்து கேட்பு கடந்த 14 ஆம் தேதி அன்று நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க மேலும் இரண்டு வார கால அவகாசத்தை சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. பொது சிவில் சட்டத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், நடந்து கொண்டிருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் பொது சிவில் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள், தாடேப்பள்ளியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். அதில் அவர்கள், பொது சிவில் சட்டத்திற்கு தாங்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “உங்கள் உரிமைகள் மற்றும் மனதை பாதிக்கும் வகையில் இந்த அரசு ஒருபோதும் செயல்படாது. இஸ்லாமியர் சமூகத்தினருக்கு எங்கள் ஆட்சி எப்போதும் துணையாக இருக்கும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சட்ட மேலவையின் முன்னாள் தலைவர் ஷெரிப் தலைமையில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவைச் சந்தித்து, பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அவரது ஆதரவைத் தருமாறு வலியுறுத்தினர். அந்தச் சந்திப்பில் சந்திரபாபு, “நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரான பொது சிவில் சட்டத்தில் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.