வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளின் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோர் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் ஓரிரு தினங்கள் முன் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் காலதாமதமாகத் திறக்கப்படுவதால், பள்ளி வேலை நாட்களில் எண்ணிக்கையை சரி செய்ய மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு அந்த விடுமுறை நாட்கள் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியிலும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜுன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது” என அறிவித்துள்ளார்.