
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பத்திற்கு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்கு காரணமானவர்கள் அதற்கான விலையை கொடுப்பார்கள். இந்தியா சரியான பதிலடி கொடுத்து தாக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீஸில் கவுதம் கம்பீர் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கையை (F.I.R.) பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.