
ஐஏஎஸ் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் கருங்கடல் மேல பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கத்துரை - விஜயா தம்பதியின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27) தேசிய அளவில் 783 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
பெலிக்ஸ் காபிரியேல் மார்க் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் கடந்து 2019 ஆம் ஆண்டு முடித்தார். அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்துக்கு பணிக்கு சேர்ந்துள்ளார். இதை விரும்பாத அவரது தந்தை தங்கராஜ் தனது மகனை ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தியுள்ளார். முதலில் ஐஏஎஸ் தேர்வு கடினம் என நினைத்து மறுத்து வந்த அவர், பின்னர் தனது தந்தை விருப்பப்படி ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவெடுத்து தயாராகி உள்ளார். முதலில் மூன்று முறை தேர்வாகவில்லை. விடாமுயற்சியுடன் தேர்வு எழுதியதில் இரண்டு முறை நேர்காணல் வரை சென்று வந்துள்ளார். தற்போது 6வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேசிய அளவில் 783 வது இடம்பெற்று தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெலிக்ஸ் காபிரியேல், “நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என விரும்பிய என் தந்தையின் கனவை நனவாக்க முதன்முதலில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதத் தொடங்கினேன். வீட்டிலிருந்தே படித்து வந்தேன். எனது படிப்புக்கு பெற்றோர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். விடாமுயற்சியின் காரணமாக எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இது என்னோட 6வது முயற்சி. தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி மூலையில் இருக்கக்கூடிய சிறிய கிராமமான மேல பனைக் குளத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவோர் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன், தோல்விக்கான தவறுகளில் இருந்து பாடம் கற்றால் வெற்றி சாத்தியம்” என்றார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி