Skip to main content

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கம் இந்தியாவில் முடக்கம்!

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

Pakistan govt official X social media page blocked in India

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில்  17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (23.04.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், “இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்தியாவிற்கு வரப் பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை. தற்போது எஸ்.வி.இ.எஸ்.(SVES) விசாவில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்குக் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்.வி.இ.எஸ். விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். முப்படைகளும் அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து தண்டனை தரும் வரை ஓயமாட்டோம். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். பாதுகாப்பு; விமானப்படை; கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாபாத்தில் இருந்து அழைக்கப்படுவர். தூதராக உதவிகள் குறைக்கப்படும். சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யப்படும்” என முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ (GOVT OF PAKISTAN) எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அரசின் க்ஸ் சமூக வலைத்தள பக்கத்தை இந்தியாவில் முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான்  நாட்டின் கராச்சி கடற்கரையில், அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள், இன்றும் (24.06.2025), நாளையும் (25.06.2025)) என 2 நாட்கள் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணை சோதனை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியப் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Pakistan govt official X social media page blocked in India

அதே சமயம் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்