உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்திரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, கோவில் கருவறையில் வைக்கப்பட உள்ள ராமர் சிலையை எடுத்து வந்து வழங்கவுள்ளதாகவும், அதன்பின்பு அந்த சிலைக்கு பூஜை செய்து கருவறையில் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், பிரதமர் மோடி சிலையைத் தொட்டு எடுத்து வருவதால் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதில் பிரதமர் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவரே தான் என்று கூறி வருகிறார். கோவில் கட்டியதில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம்தான். அதற்குப் பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும், அங்கு ஞான வாபி ஜோதிர்லிங் காசி கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் ராமர் கோவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலரும் கூறிவரும் நிலையில், ராமர் கோவில் கட்டியதற்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்பு இல்லை என்ற வகையில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து பாஜகவினர் மத்தியில் கலக்கத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாம்.
Prime Minister is laying claims to be the author and builder of the Ram Mandir temple in Ayodhya. His contribution is zero. Modi instead should concentrate on his Varanasi constituency where the Gyan Vapi Jyotirling Kashi Temple needs to be re-built.— Subramanian Swamy (@Swamy39) January 19, 2024