இளங்கலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கான விண்ணப்ப பதிவும் நேற்று (13.07.2021) மாலை ஐந்து மணிக்குத் தொடங்கியது. இந்தநிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதன்முறையாக குவைத்தில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதியாக, குவைத்தில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்தி, அசாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே நீட் தேர்வு நடத்தப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் முதல் பஞ்சாபி மற்றும் மலையாளத்திலும் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மொழிகளில் நீட் தேர்வை நடத்துவது, புதிய கல்விக் கொள்கையின் கீழ் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கிற்கு ஏற்ப உள்ளது என மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.