தனது கைலாசா நாட்டினை சுற்றிப் பார்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நித்தியானந்தா.
பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபத்தில் தலைமறைவானார். காலாவதியான பாஸ்போர்ட் வைத்துள்ள நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டது. அதனையடுத்து ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்கத் திட்டமிட்டதாகவும், அந்த நாட்டிற்கு கைலாசா எனப் பெயரிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கைலாச தொடர்பாக அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்ட நித்தியானந்தா, அந்நாட்டில் ஆன்மீகத்தில் விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் வந்து குடியேறலாம் எனவும், ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற மத்திய வங்கியை ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டார். சில மாதங்களுக்கு முன்பு, கைலாசாவிற்கான கொடி, கைலாசாவிற்கான பாஸ்போர்ட் போன்றவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தனது கைலசா நாட்டினை சுற்றிப் பார்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நித்தியானந்தா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைலாசாவுக்கு வருகை தர விரும்புபவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாமல் கைலாசாவில் மூன்று நாட்கள் தங்குவதற்கு விசா இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை சந்திக்க ஆர்வம் உள்ளவர்கள் கைலாசா வெப்சைட் மூலமாகப் பதிவு செய்து தன்னை சந்திக்கலாம் என அறிவித்துள்ளார். இதுதவிர, தினசரி 10 முதல் 25 நபர்களை மட்டும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நித்தியானந்தா, கைலசா வர ஆர்வம் உள்ளவர்கள், தங்களது சொந்த செலவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட வேண்டுமெனவும், பின்னர் அங்கிருந்து 'கருடா' எனும் சிறிய வகை விமானத்தின் மூலம் அவர்கள் கைலாசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார். இதில் பயணிகளுக்கான சலுகையாக கைலாசாவில் இருந்து மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.