வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் தோன்றியது.
30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் இன்று தோன்றியுள்ளது. தென் தமிழகம், கொச்சின், அஹமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் தன்னால் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்கமுடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்திற்காக ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் நடந்த கிரகணத்தின் காட்சிகளை பார்த்தேன். இது தொடர்பான வல்லுனர்களுடன் பேசியதன் மூலம் இந்த விஷயத்தில் எனது அறிவு வளப்பட்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.