இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, அதனை மக்களுக்கு செலுத்தும் பணிகள் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில், முதற்கட்டமாக கரோனா முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பையோடெக் நிறுவனம், ‘கோவாக்சின்’ தடுப்பூசியை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘கோவாக்சின்’ தடுப்பூசியைக் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் தவிர்க்க வேண்டுமென பாரத் பையோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், இரத்தக்கசிவு உள்ளவர்கள், காய்ச்சல் மற்றும் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டவர்கள் ‘கோவாக்சின்’ தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் கடுமையான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள், அதனை தடுப்பூசி செலுத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ள பாரத் பையோடெக் நிறுவனம், வேறு கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.