சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் அவ்வப்போது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒன்றாக மாறிவரும் நிலையில் ஓடும் லாரியில் இருந்து ஆடுகள் திருடுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளியான அந்த வீடியோவில், நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் லாரியிலிருந்து நபர் ஒருவர் ஆடுகளை தூக்கி சாலையில் போடுகிறார். பின்னர் லாரியின் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த கார் லாரியின் பின்புறம் சென்றபோது லாரியில் இருந்து ஆடுகளை தூக்கி எறிந்த நபர் காரில் லாவகமாக இறங்கி தப்பித்துக் கொள்கிறார். மொத்தமாக பத்து ஆடுகள் லாரியில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் இகற்புரி கோடி நெடுஞ்சாலையில் நடந்தது தெரியவந்துள்ளது. கோடி நெடுஞ்சாலை பகுதியில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தை ஒன்று இருக்கும் நிலையில் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஆடுகளை லாரியில் ஏற்றி செல்லும் பொழுது இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. லாரியின் பின்னே காரில் சென்றவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில் தற்போது வைரல் ஆகியுள்ளது.