நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 ஆம் தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் அமர்வின் போது கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு விவாதமே நடைபெறாமல் இன்றுடன் (06.04.2023) முடிவடைந்தது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதிலிருந்து அதானி முறைகேடு விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு விசாரணை குழு அமைக்க வேண்டும், ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது" என்று பேசியதற்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் கடும் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எவ்விதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படாமல் இன்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடாளுமன்ற கொள்கை ஆராய்ச்சி கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவை மொத்தம் சுமார் 133 மணிநேரங்கள் செயல்பட வேண்டிய நிலையில், வெறும் 45 மணிநேரங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இது மக்களவை செயல்பாட்டின் படி எதிர்பார்க்கப்பட்டதில் 34.28% மட்டுமே ஆகும். அதே போன்று மாநிலங்களவை மொத்தம் 130 மணிநேரங்கள் செயல்பட்டு இருக்க வேண்டிய சூழலில் வெறும் 31 மணிநேரங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை செயல்பாட்டில் எதிர்பார்க்கப்பட்டதில் இது 24% மட்டுமே ஆகும்" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்றைய கூட்டத்தொடரின் தனது இறுதி உரையில், "பட்ஜெட் மீதான விவாதம் 14.45 மணிநேரம் நடைபெற்றது. இதில் 145 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது 143 பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் 13.44 நிமிடங்கள் நடைபெற்றது. மக்களவையில் எட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை உறுப்பினர்களின் 29 கேள்விகளுக்கு வாய்மொழியாகப் பதிலளிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.