இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணயக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் தொடர்பான குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளின்படி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நாணயக் கொள்கை குழு கூட்டத்தின் குறிப்புப்படி, "விலை உயா்வால் பொருளாதாரத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, செயல்திறன் மிக்க விநியோகச் செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம்" என அவர் கூறியுள்ளார்.