ஹரியானா மாநிலத்தில் பொதுவெளியில் வைத்து அரசு அதிகாரியைக் காலணியால் அடித்த வழக்கில் பா.ஜ.க. பெண் தலைவர் சோனாலி போகத் கைது செய்யப்பட்டுள்ளார்.
'டிக்டாக்' மூலம் பிரபலமான சோனாலி, ஹரியானா பா.ஜ.க.வில் முக்கியத் தலைவராகத் தற்போது வலம் வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டார். தனது செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் சோனாலி, ஹிசார் பகுதியில் உள்ள பாலசமந்த் மண்டி என்ற சந்தைப் பகுதிக்குச் சென்றபோது, அரசின் சந்தைக் குழு செயலாளரான சுல்தான் சிங்கை தனது காலணியால் கடுமையாகத் தாக்கினார்.
சுல்தான் சிங், பா.ஜ.க.வின் இரு முக்கியமான பெண் தலைவர்கள் குறித்து மோசமாக விமர்சனம் செய்ததாலேயே அவரைக் அடித்ததாக சோனாலி தெரிவித்ததோடு, இதற்காக ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் சுல்தான் சிங்கிடம் இருந்து சோனாலி பெற்றார். மேலும், சுல்தான் சிங் மீது காவல்நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் உதவி செய்யாததற்காகவே தன்னை சோனாலி அடித்ததாகக் கூறும் சுல்தான் சிங், தன்னை மிரட்டி சோனாலி மன்னிப்புக் கடிதம் வாங்கியதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று, கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் சோனாலி போகத் மீது ஹரியானா போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.