அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பிய மகன்;
எலும்புக்கூடாக கிடந்த தாயார்!
அமெரிக்காவில் இருந்து ஓராண்டிற்குப் பிறகு இந்தியா வந்த மகன், தன் வீட்டில் தாயார் எலும்புக்கூடாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா சஹானி. இவரது மகன் ரிதுராஜ் அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் தன் மனைவியுடன் அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.
இவர் ஆறுமாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை தன் தாயாரைப் பார்க்க நாடு திரும்புவார். அதேபோல் நேற்று ரிதுராஜ் தன் தாயாரைப் பார்க்க இந்தியா வந்துள்ளார். அப்போது தன் தாயார் வசிக்கும் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து ஒருவர் உதவியுடன் பூட்டிய கதவை ரிதுராஜ் உடைத்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது, அவரது தாயார் உடல் முழுவதுமாக அழுகிய நிலையில், வெறும் எலும்புக்கூடாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் ரிதுராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உள்பக்கமாக கதவி பூட்டியிருந்ததால் இது இயற்கை மரணமாக இருக்கலாம்; பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே கூடுதல் தகவல் கிடைக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் 10-ஆவது மாடியில் இந்த சம்பவம் நடந்திருந்தும், அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாமல் ஆஷா பிணமாக நீண்ட நாட்களாக வீட்டிற்குள் கிடந்துள்ளார்.
ரிதுராஜ் கடைசியாக தன் தாயாருடன் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்