பாஜக பெண் வேட்பாளரை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பாலியல் ரீதியிலான விமர்சனம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாக தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ம்ரிதி இரானி, "ஒரு பெண் அரசியல் தலைவருக்கு எதிராக இத்தகைய கேவலமான வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு கமல்நாத் தரக்கூடிய எந்த நியாயத்தையும் அவர் கூறியதாக தெரியவில்லை. காந்தி குடும்பம் ஏன் முற்றிலும் அமைதியாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஒரு பெண்ணுக்கு எதிராக இத்தகைய கேவலமான அறிக்கையை வெளியிட்டதற்காக கமல்நாத் மீது காந்தி குடும்பத்தினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் கமல்நாத், திக்விஜய் சிங் போன்றோர் காந்தி குடும்பத்திற்கு முக்கியமானவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.