குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 317 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுபவர்களைக் கண்டறியத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குறிப்பிட்ட கும்பல் தொடர்பாக சில இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டது.
அப்போது குடோன்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 317 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் இருந்து மட்டும் 217 கோடி ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் சிக்கின. 6 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான விகாஷ் என்பவர் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி என நான்கு மாநிலங்களில் கூரியர் சேவை செய்து வருவதாக தெரிவித்தனர். கூரியர் மூலம் கள்ள நோட்டுக்களை தனது கூட்டாளிகள் மூலம் புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது.