கரோனா தொற்று காரணமாக இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கணவன் வழிபடும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தங்கள் மனைவியின் நினைவாக மன்னர்கள் பல்வேறு நினைவுச் சின்னங்களைக் கட்டியுள்ளனர். குறிப்பாக உ.பி.யில் உள்ள ஆக்ராவில் முகலாய மன்னன் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டியுள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளமாக இன்றளவும் இருந்துவருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியின் நினைவாக கோயில் கட்டி, வழிபாடு செய்வது தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவருடைய காதல் மனைவி கீதாபாய். கரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரத்தோரின் மனைவி கீதாபாய் பலியானார். இதனால் மனமுடைந்து போன அவர், மனைவியின் இறப்பில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துவந்தார். சில வாரங்களுக்குப் பிறகு மனைவிக்குக் கோயில் கட்ட முடிவெடுத்த அவர், தற்போது அனைத்து பணிகளையும் முடித்து கோயிலை முழுவதுமாக கட்டியுள்ளார். அதில் தன் மனைவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்தக் கோயிலுக்கு வரும்போது தன் மனைவி தன்னுடன் இருப்பதைப் போலவே உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.