கலவரத்தைத் தூண்டிய ஹனிபிரீத் சிங்! விசாரணையில் வெளிவந்த உண்மை!
குர்மீத் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், மிகப்பெரிய கலவரத்தைத் தூண்ட ஹனிபிரீத் சிங் அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கியதும், உடனடியாக அதற்காக ரூ.1.25 கோடியை பணப்பட்டுவாடா செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கை, ஆக்ஸ்ட் 25ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளித்தது ஹரியானா சிபிஐ நீதிமன்றம். அப்போது ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில், 40 பேர் உயிரிழந்தனர். பலகோடி மதிப்பு பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டு நாசமாகின. இந்த குற்றத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட, குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் தலைமறைவாகினார். அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 39 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உதவியாளர் ராகேஷ்குமார் என்பவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், கலவரத்தைத் தூண்ட ரூ.5கோடியும், உடனடி பணமாக ரூ.1.25 கோடியும் தேரா அமைப்பின் அதிகாரியான சம்கவுர் சிங் மூலமாக ஹனிபிரீத் ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இந்த ஆதாரத்தின் மூலம் ஹனிபிரீத்தை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.