பாஜகவுக்கு சித்தராமையா வைத்த ஆப்பு!
கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த அமைச்சர் சிவக்குமார் வீடுகளில் மோடி அரசு ரெய்டு நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா மீது மாநில லஞ்ச ஒழிப்புத் துறை இரண்டு ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் மீது பல ஊழல் புகார்கள் இருந்தன. பல புகார்களில் இருந்து அவர் விடுதலை ஆகி இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், 2008ம் ஆண்டு பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய 3546 ஏக்கர் நிலத்தில் 257 ஏக்கர் நிலத்தை விடுவிக்கும்படி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது. இதன் பேரில் இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த புகார்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தெரிவித்துள்ளது. ஆனால், உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினியா என்று கேட்காமல் கம்மென்று காரியத்தில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.