கடந்த வருடம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தன. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது
இந்த ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனை, உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்தனர். அவருடன் மேலும் மூன்று பேரை கைது செய்த உத்தரப்பிரதேச போலீஸார், அவர்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கும் சித்திக் கப்பனுக்கும் தொடர்பு இருக்கிறதென்றும் குற்றஞ்சாட்டி அனைவரையும் சிறையில் அடைத்தனர். சித்திக் கப்பன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) சட்டம் பாய்ந்தது.
இந்தநிலையில், சித்திக் கப்பனுக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து, ஏற்கனவே நீரிழிவு மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சித்திக் கப்பன், மதுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனையில் சித்திக் கப்பனை கட்டிலோடு பிணைத்து வைத்திருப்பதாகவும், சிறுநீர் கழிக்கக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி, சித்திக் கப்பனின் மனைவி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
மேலும், கேரள முதல்வர் பினாரயி விஜயனும் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார். அதில் சித்திக் கப்பனை வேறு ஒரு அதிநவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில், சித்திக் கப்பனை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரும் வழக்கு இன்று (28.04.2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் சித்திக் கப்பனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கோ அல்லது டெல்லியில் உள்ள வேறு அரசு மருத்துவமனைக்கோ மாற்றுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.