இந்திய வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த பணக்காரர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவர்களைப் போன்றே பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி, டொமினிக்கா தீவில் சிறையில் உள்ளார்.
இந்த மூன்று பணக்காரர்களுக்கும் எதிராக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களை இந்தியாவிற்கு கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மூவரும் மொத்தமாக 22,586 கோடி வங்கிகளில் மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 18,170.02 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளதோடு, 9371.17 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கடன் வழங்கிய வங்கிகளின் பெயர்களுக்கு மாற்றியுள்ளது. அமலாக்கத்துறை மொத்தமாக முடக்கியுள்ள சொத்துக்களின் மதிப்பான 18,170.02 கோடி ரூபாய் என்பது வங்கிகள் இழந்த தொகையில் 80.45 சதவீதமாகும். தற்போது வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ள 9371.17 கோடி ரூபாய் என்பது வங்கிகள் இழந்த தொகையில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.