அமெரிக்காவின் மத்திய வங்கியின் ஆய்வறிக்கையில், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் வியாழனன்று (ஜூன் 11) கடும் வீழ்ச்சி அடைந்தன.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து 34 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகி வந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தன. நேற்று முன்தினம் 34247 புள்ளுகளுடன் வர்த்தகத்தை முடித்திருந்த சென்செக்ஸ், நேற்று காலையில் 34214 புள்ளிகளுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதிகபட்சமாக 34219 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 33480 புள்ளிகளுக்கும் ஏறி, இறங்கி பூச்சாண்டி காட்டிய சென்செக்ஸ், வர்த்தக நேர இறுதியில் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஒரே நாளில் 708.68 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
சென்செக்ஸில் வர்த்தகத்தை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 5 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஓரளவு விலையேற்றம் கண்டன. 25 நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக இண்டஸ்இந்த் (4.49%), நல்ல ஏற்றம் கண்டது. ஹீரோ மோட்டார்ஸ், பவர் கிரிட், நெஸ்ட்லேண்ட், மஹிந்திரா அண்டு மஹி ந்திரா பங்குகளின் விலையும் சிறிதளவு உயர்ந்தன.
அதேநேரம் மும்பை பங்குச்சந்தையில் கடந்த 52 வார காலங்களில் 78 நிறுவனங்களின் பங்குகள் உச்ச விலையைத் தொட்டன. 51 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிப்டி நிலவரம்:
தேசிய பங்குச்சந்தையான நிப்டி, நேற்று முன்தினம் (ஜூன் 10) 10116 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிப்டி, இறுதியில் 9902 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. முந்தைய நாள் வர்த்தகத்தைக் காட்டிலும் இது 214.15 புள்ளிகள் சரிவாகும்.
நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 முக்கிய நிறுவனங்களில், வெறும் 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஓரளவு ஏற்றம் பெற்றன. 24 பங்குகளின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச்சந்தையில் இன்பிராடெல், ஸீல், பாரத ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
இன்று எப்படி இருக்கும்?
நடப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று (ஜூன் 12) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்திக்கக் கூடும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். ஏனெனில், நேற்று அமெரிக்க பங்குச்சந்தை 3 சதவீதம் வரை ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதன் தாக்கம் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கவே, அங்கும் 2.50 சதவீதம் வரை சரிந்தன.
ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸின் வினோத் நாயர், புதிய வடிவம் பெற்றுள்ள கரோனா வைரஸால் மேலும் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால், அமெரிக்க பங்குச்சந்தைகள் அடுத்து வரும் காலக்கட்டங்களில் பெரிய அளவில் இறங்குமுகத்தில் இருக்கும் என்றும், அதன் தாக்கம் உலகின் மற்ற பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்றும் சொல்கிறார்.
ரேலிகர் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, உலக பங்குச்சந்தையில் நிகழும் வர்த்தக ஏற்ற, இறக்கங்கள்தான் இந்தியாவின் தலால் தெருக்களின் வர்த்தகப் போக்கையும் இனி நிர்ணயம் செய்யும் என்கிறார்.
எனினும், இப்போதைய சூழலில் ஓரளவு பொருளாதார வலிமை உள்ள மிட்கேப் பங்குகளை வாங்கலாம் என்றும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடுத்த இரண்டு காலாண்டிற்கும் 100 சதவீதம் ஆதாயம் ஈட்ட முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்து வரும் நாள்களிலும் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடரும் அபாயமும் இருக்கிறது.