கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தனது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் பதட்டத்தால் பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், பகல் 1.30 மணி அளவில் 169.34 புள்ளிகள் குறைந்து 36,044 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, பகல் 1.30 மணி அளவில் 32 புள்ளிகள் சரிவடைந்து 10,848 புள்ளிகளிலும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பங்குகளின் விற்பனை எண்ணிக்கை பெரும் அளவு சரிவடைந்துள்ளது தெரிகிறது. மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71.065 என்ற அளவில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பதட்டத்தால் பங்குச்சந்தையில் அதிகமான வர்த்தகர்களால் பங்கேற்கவில்லையென பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.