மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், கலவரமாக மாறியது.
மூன்று மாத காலமாக நீடிக்கும் இந்தக் கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கோவில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பேர் கொல்லப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் மாநிலத்திலேயே வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாறி வருகின்றனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பான கொடூர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, அந்த மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையின் தீவிர ரோந்து, கண்காணிப்பு காரணமாக மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது. ஆனாலும், மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் இன்னும் முற்றிலுமாக நின்றுவிடவில்லை.
இந்த நிலையில், நாகாலாந்து மாநிலம் திமாபூரில் இருந்து மணிப்பூர் மாநிலத்துக்கு பாதுகாப்புப் படையினரை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள் சென்றன. மணிப்பூர் காங்போக்பி மாவட்டத்தில் சபோர்மீனா என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை அந்தப் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது . அப்போது, அந்தப் பேருந்துகளின் மணிப்பூர் பதிவு கொண்ட எண்களைப் பார்த்த சபோர்மீனா பகுதி மக்கள், அந்தப் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பேருந்துகளில் ஏறி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
அப்போது அந்தக் கும்பலில் இருந்த சிலர் பாதுகாப்புப் படையினர் வந்த பேருந்துகளுக்குத் தீ வைத்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதே போல், மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மோரே நகரப் பகுதியில் உள்ள சில ஆளில்லாத வீடுகளில் நேற்று ஒரு கும்பல் தீ வைத்துள்ளது. இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வன்முறைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.