கரோனா நோய்த் தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், புதுச்சேரியில் நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சந்தேக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல், அனைத்துப் பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் தொடங்கப்படும் என்றும், இதில் 4-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும், 18-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் கரோனா பரவலுக்கு முன்பு செயல்பட்டது போலவே முழு நேரமும் செயல்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மத்திய அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இதனிடையே நாளை முதல் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் முழுமையாகத் திறந்தபிறகு கல்லூரிகளும் முழுமையாகத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.