ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், நேற்று காலை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் வீட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அந்த விடுதியில் இன்று தொடங்கிய இரண்டாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும், சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்தும், விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்குவதற்காக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார் அசோக் கெலாட். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.