சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்கள் உள்ளே செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று ஐப்பசி பூஜைக்காக அங்கு நடை திறக்கப்படுகிறது. இதனிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலிஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது.
1500 போலிஸாரில் 1000 போலிஸார் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதில் 800 ஆண் போலிஸார், 200 பெண் போலிஸார் பாதுகாப்பிற்காக உள்ளனர். மீதம் இருக்கும் 500 போலிஸார் சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாபிற்காக வந்த பெண் போலிஸாரை தேவசம் போர்டு போலிஸார்கள் சபரிமலைக்குள் அனுமதிக்காததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பம்பையில் பெண் போலிஸாரையே அனுமதிக்க மறுத்துள்ளது, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.