Skip to main content

கேரளா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு கேரள முதல்வர் பதிலடி!

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
கேரளா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு கேரள முதல்வர் பதிலடி!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கேரளாவில் நடைபெறும் ஆட்சிகுறித்து கூறிய கருத்துக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.



இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவர் மோகன் பாகவத். இவர் கடந்த சனிக்கிழமை நாக்பூரில் விஜயதசமி விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, ‘பினராயி விஜயன் ஆட்சி செய்யும் கேரளா மற்றும் மம்தா பானர்ஜி ஆட்சிபுரியும் மேற்கு வங்கத்தில் தேச விரோத மற்றும் தீவிரவாத சக்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன’ என கூறியிருந்தார். 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, ‘இது ஆர்.எஸ்.எஸ். போன்ற இனவாத அமைப்புகளின் வழக்கமான மக்களைப் பிளவுபடுத்தும் வேலைதான். அவர்களால் கேரளாவில் இருக்கும் மக்களிடையே ஊடுருவி விட முடியவில்லையே என்ற கவலையில் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேரளாவில் நாங்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும், வன்முறைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் இனவாத சக்திகளை இனவாத சக்திகளாகவும், தீவிரவாதிகளாகவும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவும் நடத்துகிறோம். அவர் சிறுபான்மையின மக்களை நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுதானே அவர்களது அமைப்பின் அடிப்படை எண்ணமே. கேரளாவில் மக்கள் ஆதரவுடன் கூடிய, மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, தேசப்பற்று குறித்து உங்களிடமிருந்தோ, உங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தோ எந்தவிதமான பாடமும் எங்களுக்கு வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்