கடலூர் அருகே ரவுடிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் பலத்தக் காயமடைந்தனர். புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரபல ரவுடி தாடி அய்யனார் என்கிற ராஜதுரை (28) மற்றும் தமிழ்நாட்டுப் பகுதியான கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலத்தை அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (24). இவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரிடம் ஒன்றாக செயல்பட்டுவந்த நிலையில், தேவா உறவினரை அய்யனார் தரப்பு தாக்கியதால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதனால் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி அய்யனார் கோஷ்டி நேற்று (30.06.2021) வழக்கமாக மது அருந்தும் கடலூர் மாவட்ட எல்லையான மலட்டாறு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து.
அய்யனாரை தாக்க தேவா கோஷ்டி நாட்டு வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அய்யனார் மற்றும் அவரது கூட்டாளி வேல்முருகனை தேவா கோஷ்டி கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு அய்யனார் கோஷ்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நாட்டு வெடிகுண்டை எடுத்து தேவா வீச முற்பட்டபோது வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை விரல் துண்டானது. படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலம் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு நாட்டு வெடிகுண்டுகள் சிதறிக்கிடந்தன. தமிழ்நாடு - புதுச்சேரி இரு மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அம்மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் ரவுடிகளுக்குள்ளான மோதல் என்பது தெரியவந்தது. இந்தநிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கைவிரல் துண்டான தேவா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மோதலில் காயமடைந்த அய்யனார், வேல்முருகன் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.
இந்த மோதலில் தொடர்புடைய பிரபல ரவுடி தாடி அய்யனார் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கோஷ்டிகள் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியான ரெட்டிச்சாவடி, கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். இரு மாநில எல்லை கிராமங்களில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு வீச்சு மற்றும் கோஷ்டி மோதலையடுத்து எல்லைப்புற கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.