Skip to main content

எங்கள் எய்ம்ஸ் எங்கே? - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Su. Venkatesan has questioned where Madurai AIIMS Hospital

மதுரை மாவட்டம் தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ஒத்த செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளது என்று கூறியது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த ஒத்த செங்கல்தான் இருக்கிறது என்று ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றது. 

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எய்ம்ஸ் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்