Skip to main content

“ஆய்வுப் பணியை தொடங்கிய ரோவர்” - இஸ்ரோ அறிவிப்பு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Rover Launches Survey ISRO Announcement

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

கடந்த 23 ஆம் தேதி மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், லேண்டரில் இருக்கும் ரோவர் எப்போது வெளியே வந்து அதன் ஆய்வினைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் உலக நாடுகளில் உள்ள பல விண்வெளி ஆய்வு மையங்கள் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் உள்ளிட்ட மூன்று கருவிகளின் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவு அதிர்வை அளவிடும் கருவி, நிலவின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்யும் கருவி, வெப்ப இயற்பியல் பரிசோதனைக் கருவி எனும் மூன்று கருவிகள் செயல்பாடும் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களை தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையை பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக நிலாவில் லேண்டர் தரையிறங்கிய போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும், டெல்லியிலிருந்து நேராக இன்று பெங்களூருவில் வந்திறங்கினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்