இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.
இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.
நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து நேற்று முன் தினம் இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளது. ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும் என்ற நிலையில், 3 மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் பள்ளத்தை உணர்ந்துள்ளது. மேடான பகுதியைக் கடக்கக் கூடிய வகையில் ரோவரில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று தனது பாதையில் 4 மீட்டர் பள்ளம் இருந்ததால் புதிய பாதையை மாற்றி சந்திரயான் பிரக்யான் ரோவர் தற்போது புதிய பாதையில் பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரில் இருந்து ரோவர் 500 மீட்டர் பயணிக்க முடியும் என்ற நிலையில் 8-10 மீட்டர் வரை தொலைவில் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.