ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - மத்திய அரசு
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் 40,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாக்குமூலத்தை சமர்ப்பித்தது.
அதில், இந்தியாவில் ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களில் பலர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். இதனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதற்கான புலனாய்வு சான்றுகள் தம்மிடம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்யாக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யாக்கள் இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பலர் அகதிகளுக்கான சான்றுகள் பெறாமல் சட்டவிரோதமாக வசித்து வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் இந்திய குடிமகன்கள் பயணிக்கலாம். ஆனால், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களால் தேச பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இதில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது வாக்குமூலத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மியான்மரில் ரோஹிங்யாக்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான ரோஹிங்யாக்கள் செல்ல வழியின்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்