உத்தரகாண்ட் சுரங்க விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்கியான என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. விசாரணைக்குப் பின் இந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் சுரங்கப் பாதை பணிகளை மேற்கொள்வதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 200 மீட்டர் பரப்பளவில் உள்ள பாறையை அகற்றும் பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.