தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அவ்வப்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்தின் தேவை கருதி மத்திய அரசு மருந்து ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து முக்கிய இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.